EWS குறித்து பரவலாக எழுந்துள்ள கவலைகளை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பரவலாக எழுந்துள்ள கவலை களை ஒன்றிய அரசு பரிசீலனை செய்திட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு நவம்பர் 9 புதனன்று மாலை வெளியிட்ட அறிக்கை வருமாறு: பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள இரு  வேறுபட்ட கருத்துக்களுடைய தீர்ப்பு குறித்து பரவலாக எழுந்துள்ள கவலைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது; அவற்றுக்கு தீர்வுகாண வேண்டிய தேவை உள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று வரையறை செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி வரம்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி  எழுப்பி வருகிறது. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கும் போது, அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.8  லட்சம் என வரையறை செய்யப்பட்டுள்ளது; மேலும் 5 ஏக்கர்  விவசாய நிலம் இருக்கலாம், ஒரு குடியிருப்பு மனை ஆயிரம் சதுர அடி அளவில் இருக்கலாம்; மற்றும் ஒரு  குடியிருப்பு வீடு 900 சதுர அடி அளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட நகராட்சி எல்லைக்குள் இருக்கலாம் என்பது உள்ளிட்ட வரம்பு கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொருளாதார  ரீதியாக மிகவும் கீழ்நிலையில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் குறைந்த ஊதியம் மற்றும் வரி செலுத்தாத அளவிற்கான வருமானமே நிர்ணயிக்கப்பட வேண்டும்; மாறாக, தற்போதைய வரம்பு  என்பது உண்மையிலேயே ஏழைகளாக இல்லாத ஏராள மான நபர்களை இந்த இடஒதுக்கீட்டு வரம்புக்குள் கொண்டு  வந்துள்ளது; இட ஒதுக்கீட்டின் பலன்களை அவர்களே பெறுவதற்கும் வழிவகை செய்துள்ளது. இதன்விளைவாக, ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களுக்கு எதிரான பாகுபாடு மேலும் தீவிரமடைந்துள்ளது. எனவே, பொருளா தாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான தனது கொள்கையில் இந்த கவலைகளையும் உள்ளடக்கி அரசு மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியமானதாகும். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு கூறியுள்ளது.

Leave a Reply