இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் டி.ஜி.முனியம்மாள், செயலாளர் இள வரசி,மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பிரேம்பஞ்ச காந்தி, மாவட்ட தலைவர் அனுமிதா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவர் விஜயா, தலித் பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயலாளர் சரளா ஆகியோர் ரெட்டி யார் பாளையத்தில் கூட்டாக செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியின் பல்வேறு பிரச்சனைகள் அடங்கிய கோரிக்கை சாசனமாக நாங்கள் தயாரித்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
- புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடை களை திறந்து, அரிசி உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களை வழங்க வேண்டும் .
- 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, வேலை செய்யும் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். திட்ட பயனாளிகளுக்கு நல வாரியம் அமைத்து, கூலியை ரூ. 600 ஆக உயர்த்திட வேண்டும்.
- சட்டமன்ற மற்றும் மக்களவையில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்.
- புதுச்சேரியில் செயல்படாமல் இருக்கும் மகளிர் ஆணையத்தை செயல்படுத்திட வேண்டும்.
- இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடை செய்ய வேண்டும்
என்பன 12 அம்ச கோரிக்கைகள் இந்த கோரிக்கை சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது .
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 வரை பாஜக ஆட்சியால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர்.
ஆகவே இவற்றை களைய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது மாதர் சங்க நிர்வாகிகள் சத்யா, உமாசாந்தி, ஜானகி ஆகியோர் உடன் இருந்தனர்.