புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மீண்டும் மக்கள் மீது மின்கட்டண உயர்வை திணித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
கடந்த பாஜக திமுக மத்திய ஆட்சியின் போது எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆதரவோடு மின்சாரச் சட்டம் 2003 நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக மின்சார கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்துவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி மாநில என்.ஆர். காங்கிரஸ் 2013-14ஆம் ஆண்டுக்கு நான்கு மடங்கு மின்சார கட்டண உயர்வை அறிவித்தது. மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கையால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் மின்கட்டண உயர்வு மேலும் மக்களை கடுமையாக பாதிக்கும்.
மின் துறை சார்பில் நடப்பு நிதி ஆண்டு (2014-15) கட்டண உயர்வு சம்பந்தமாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் 2014-15 ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு இல்லாமல் நடப்பு நிதியாண்டுக்கான கட்டணத்தையே வசூலிக்கவும் நடப்பு நிதிஆண்டில் ஏற்படும் இழப்பை 2015-16 ஆம் ஆண்டில் வசூலிக்கவும், மின்சார ஆணையத்திடம் 14-03-2014ல் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்தது. அதற்கு நேர் எதிராக மாநில அரசு வீட்டு உபயோகத்திற்கு ரூ.0.35 பைசா வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.0.50 பைசாகவும், தொழில் நிறுவனங்களுக்கு 8% மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில் இது மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். மேலும் தொடரும் மினிதட்டுப்பாடும், செங்குத்தாக உயரும் மின்கட்டண உயர்வும் தொழில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன; புதிய தொழிற்சாலைகள் ஏதும் வரவில்லை; வேலைவாய்ப்பும் கேள்விகுறியாகி உள்ளது.
மாநிலத்தில் மின் இணைப்பு, மின் திருட்டு ஆகியவற்றின் மூலம் 29.38 சதம் மின் இழப்பு ஏற்படுகிறது. இந்த மின் இழப்பு கொள்முதல் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்காகும். மின் இழப்பை குறைத்தால் பெரிய அளவில் மின் கட்டண உயர்வை குறைக்கமுடியும். இதை செய்ய மாநில அரசு தயாராக இல்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரிச்சுரங்கத்தை முறையாக பயன்படுத்தி இருந்தால், மின்சாரத்தில் தன்னிறைவு பெற்று, உபரி மின்சாரத்தை விற்று மாநில அரசிற்கான வருவாயை பெருக்கி இருக்க முடியும் கட்டண உயர்வினை தவிர்த்திருக்க முடியும். இதை முந்தைய காங்கிரஸ் அரசு செய்யவில்லை. மாறாக நிலக்கரிச்சுரங்கத்தின் மூலம் ஆட்சியாளர்கள் ஆதாயம் அடைந்தனர்.
ஆகவே, மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் மின் திருட்டு, மின் இழப்பு ஆகியவற்ரை கட்டுப்படுத்த, புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரிச்சுரங்கத்தை பயன்படுத்தி மாநில மின் தேவையை ஈடுசெய்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைக்கு எதிராக மாநில மக்கள் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவண்
வெ.பெருமாள்
செயலாளர்.