புதுச்சேரி மாநிலத்தில் தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் செண்டாக் ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் கொடுத்து பலர் சேர்ந்துள்ளனர். இப்பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து போலி ஆவணம் கொடுத்து மருத்துவத்தில் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் படிப்பில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் இரண்டு பேர் மட்டுமே விலகியுள்ளதாக செண்டாக் பட்டியலில் உள்ளது. போலியான குடியிருப்பு சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே விலகியுள்ளனர். மேலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் போலி ஆவணங்கள் கொடுத்து சிலர் சேர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. போலி ஆவணங்களை சரிபார்த்தல் என்பது மருத்துவப் படிப்பிற்கு மட்டுமே நடந்துள்ளது. மருத்துவ துணைப்பிரிவு, பொறியியல் உள்ளிட்ட அனைத்து செண்டாக் மாணவர் சேர்க்கை குறித்தும் முழுமையான விசாரணை நடைபெற்றால் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும்.
ஆகவே, மாநில அரசு செண்டாக் மாணவர் சேர்க்கை முறைகேடு, மோசடி குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேற்படி விசாரணையில் குடியிருப்பு சான்றிதழ் மோசடி, சாதி சான்றிதழ் மோசடி, செண்டாக் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியதில் முறைகேடு, மருத்துவ இடஒதுக்கீட்டில் ஒரு இடம் காணாமல் போனது, அரசு மருத்துவ கல்லூரியில் NRIஇடஒதுக்கீட்டில் மோசடி ஆகியவை குறித்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய மோசடிகளில் தொடர்புடைய போலி சான்றிதழ் அளித்த அதிகாரிகள், நிர்பந்தம் அளித்த அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய செண்டாக் அதிகாரிகள் அனைவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. செண்டாக் முறைகேடுகளுக்கு முடிவுகட்ட, மோசடி தொடர்புடையவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட அனைத்துப் பகுதி மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவண்
{ வெ. பெருமாள் }
பிரதேச செயலாளர்