பத்திரிக்கை செய்தி 12.04.2008
ரேசனில் அனைவருக்கும் 14 வகைப் பொருட்களை வழங்குக, இலவச அரிசியை தொடர்ந்து வழங்குக, ரூ 2 க்கு ஒரு கிலோ அரிசி என அனைவருக்கும் வழங்குக.
ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு தன்னுடைய குறைந்த பட்ச திட்டத்தில் விரைவில் அனைவருக்குமான பொது விநியோக முறை அமல்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு நேர் மாறாக பொது விநியோக முறையை மத்திய மாநில அரசுகள் சீரழித்து வருகிறது. மாநிலங்களுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்டு வரும் உணவு தானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் ரேசனில் வழங்கப்படுகிறது. மானியம் அளித்து சந்தைவிலையைவிட குறைத்து வழங்கும் நடைமுறை உள்ளது.. விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ரேசனில் அனைத்து உணவுப்பொருட்களும் விலை குறைத்து வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
புதுச்சேரியில் 6 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுமென்று அரசு அறிவித்து ஒரு சில இடங்களில் மட்டும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. ஆனால் வெளிச்சந்தை விலைக்கு பொருட்கள் வழங்கப்பட்டதால் இத்திட்டம் மக்களால் நிராகரிக்கப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்க மாநில முதல்வர் மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் பாமாயில் உட்பட 5 பொருட்களின் விலை ரூ 211 ஆக இருப்பதாகவும் இதில் ரூ 50 மானியம் கொடுத்து விலை குறைத்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.இது வரவேற்க கூடியதாகும். ஆனாலும் 5 பொருட்களின் விலை உயர்ந்தால் அதற்கேற்ப அரசின் மானியம் அதிகரிக்குமா?, 5 பொருட்கள் வாங்கினால் தான் ரூ 50 விலை குறைப்பு வழங்கப்படுமா அல்லது எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதற்கேற்ப விலை குறைத்து வழங்கப்படுமா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆகவே , புதுச்சேரி அரசு அரிசி கோதுமை, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்பட 14 வகை அத்தியாவசியப் பொருட்களை அனைத்து ரேஷன்கடைகளிலும் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் வழங்கப்படும் பொருட்களின் அடக்கவிலையில் 25 சதவீதம் விலை குறைத்து மானிய விலையில் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. மேலும் இலவச அரிசித்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும், தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ரூ 2 க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது போல புதுச்சேரியிலும் ரூ 2 க்கு தரமான அரிசி வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.
2. கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்துக.
விவசாயிகள் மேம்பாடு விவசாய உற்பத்தி ஆகியவற்றிற்கு மத்திய மாநில அரசுகள் போதுமடான கவனம் செலுத்தாத காரணத்தால் கிராமப்புற மக்கள் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. விவசாய வேலைகள் குறைந்து தொழிலாளர்கள் நகர்புறத்திற்கும் வேறு மாநிலங்களுக்கம் வேலைத்தேடி புலம் பெயர்கிற நிலமை உள்ளது. இந்நிலையில் தான் கிராமப்புற தொழிலாளர்களுக்கு கிராமப்புற வேலை உத்திரவாதம் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் 2008 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்து புதுச்சேரியிலும் ஏப்ரல் முதல் நாள் வேலை தொடங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. வழக்கம் போல இந்த அறிவிப்பும் அமலுக்கு வரவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான ஆரம்பகட்டப்பணிகளே பல இடங்களில் முடிக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு பயனாளிகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்கவும் ஏற்பாடுகள் செய்துவிட்டார்கள் ஆனால் புதுச்சேரியில் வேலை எப்போது தொடங்கப்படும் என்பதற்கு உத்திரவாதமும் இல்லை. இது புதுச்சேரி அரசின் மெத்தனத்தைக் காட்டுகிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இனியும் காலதாமதப்படுத்தாமல் கிராமப்புற வேலைத்திட்டத்தை உடனடியாகத் தொடங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. .
இவண்
( வெ.பெருமாள்)
செயலாளர்