ஏறத்தாழ 161 ஆண்டுகளுக்கு முன், வடக்கு லண்டனில் மெய்ட்லாண்ட் பார்க் வீதியில் 1-ம் இலக்கமிட்ட வீட்டிலிருந்த படிப்பறை. அதில் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் மூன்றடிக்கு இரண்டடி மேசை; எழுதுவதற்குத் தேவையான தரவுகளான நூல்களும் ஏடுகளும் தாறுமாறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இன்னொரு சிறிய மேசை. அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்ள பழைய சோபா. கடனுக்கு வாங்கியவற்றுக்குக் காசைக் கொடு என்று மளிகைக்கடைக்காரர்களும் இறைச்சிக் கடைக்காரர்களும் மிரட்டிக்கொண்டிருந்த நாள்கள். இரவும் பகலுமாய்ப் படிக்கவும் எழுதவும் செய்ததால் புட்டத்தில் ஏற்பட்ட கொப்புளங்கள். “இந்தக் கொப்புளங்கள் பூர்ஷ்வா வர்க்கத்துக்குரியதாகுக” என ‘சாபம்’ கொடுத்துவிடுகிறார் ஒரு மனிதர்.
பின்னாளில் உலகைப் புரட்டிப்போட்ட புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த கார்ல் மார்க்ஸ்தான் அந்த மனிதர். அந்த நூலின் கையெழுத்துப் படியைப் பதிப்பாளர்களிடம் தருவதற்கான காலக்கெடு 1856-லேயே முடிவடைந்துவிட்டது. அப்போது மார்க்ஸ் சமாதானம் சொன்னார்: “இந்த நூலின் பொருள், பாணி ஆகிய இரண்டையும் மீண்டும் ஒருமுறை திருத்தி எழுதாமல், இதை வெளியிடக் கூடாது. இடைவிடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளனால், ஆறு மாதங்களுக்கு முன் எழுதியதைச் சொல்லுக்குச் சொல் அப்படியே ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியிட முடியாது.” 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை அவர் முடிக்கப் போவதாகத் தெரியவில்லை: “குறிப்பிட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிக்கப் பல ஆண்டுகளைச் செலவிட்ட பிறகு, அவற்றில் புதிய கூறுகள் தென்படத் தொடங்குகின்றன. எனவே, அவற்றைப் பற்றி மேலும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.”
1865-ல் எங்கெல்ஸுக்கு இப்படி எழுதினார் மார்க்ஸ்: “ இனி, எனது படைப்பைப் பற்றிய வெளிப்படையான உண்மையை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். எனது எழுத்துகளில் என்ன குறைபாடுகள் இருப்பினும், அவை முழுமையான கலைப் படைப்பாக அமைகின்றன என்பதுதான் அவற்றிலுள்ள அனுகூலம்.” மக்களின் உலகியல் தேவைகள், குறிக்கோள்கள், நலன்கள் ஆகியன பற்றிய உள்ளொளி பெறுவதற்கு மார்க்ஸ், தத்துவவாதிகளையும் அரசியல் ஆய்வாளர்களையும் மட்டுமின்றி கவிஞர்களையும் நாவலாசிரியர்களையும் நாடினார். 1868 டிசம்பரில் மார்க்ஸ், எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில், பால்ஸக்கின் ‘கிராமப் பாதிரியார்’ என்னும் சிறுகதையிலுள்ள ஒரு பகுதியை எடுத்தெழுதி, பொருளாதார விவகாரங்கள் குறித்து எங்கெல்ஸ் பெற்றிருந்த அனுபவரீதியான உண்மைகளுடன் ‘கிராமப் பாதிரியார்’ பற்றிய பால்ஸக்கின் சித்தரிப்பு பொருந்திவருகிறதா எனத் தனக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மூலதனம் முதல் பதிப்பு, மார்க்ஸின் கையெழுத்துடன்…
அறிவுத்தளத்தில் எத்தனையோ சாகசப் பயணங்களை மேற்கொண்ட மார்க்ஸின் ‘மூலதனம்’ (Das Capital) நூலின் முதல் பாகம் மட்டுமே 1867 செப்டம்பர் 14-ல் ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. மற்ற பாகங்கள் யாவும், அவரது மறைவுக்குப் பிறகு, அவர் விட்டுச்சென்ற குறிப்புகள், உருவரைகள் (outlines) ஆகியவற்றின் அடிப்படையில், மற்றவர்களால் நூல்களாகத் தொகுப்பட்டவையே.
சுயமாகச் சிந்திக்கும் வாசகருக்கு…
இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு தத்துவவாதிகளுக்கும் பொருளாதார அறிஞர்களுக்கும்கூடப் புலப்படாதுபோன ஒன்றைத்தான் தமது நூல் எடுத்துக்கூறப் போவதாக மார்க்ஸ் ‘மூலதனம்’ முதல் பாகத்தின் முதல் (ஜெர்மன்) பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் கூறுகிறார். ஆனால், அவருக்குத் தெரியும், அந்த நூலின் முதல் இயலைப் புரிந்துகொள்வது எல்லோருக்கும் கடினமாக இருக்கும் என்பது. மற்ற பகுதிகள் கடினமானவை என்று தம்மை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், “புதியதொன்றைக் கற்றுக்கொள்ளவும்… சுயமாகச் சிந்திக்கவும் சித்தமாக உள்ள வாசகரையே கருத்தில் கொண்டுள்ள”தாகக் கூறுகிறார். அந்தக் கடினமான பகுதியைக் கடந்து வருபவர்களுக்குப் பொருளாதார, அரசியல், சமூகவியல், இயற்கை அறிவியல், சட்டவியல் தளங்களை மட்டுமல்ல, உலக இலக்கிய வாசல்களையும் திறந்து வைக்கிறார். இந்த நூலில் வளர்த்தெடுக்கப்படும் கோட்பாடுகளுக்கான முதன்மையான எடுத்துக்காட்டாக இங்கிலாந்தைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை விளக்குகிறார் மார்க்ஸ்: “தமது நாட்டில் நிலைமை அவ்வளவு மோசமில்லை என்று ஜெர்மானிய வாசகர் நன்னம்பிக்கையுடன் ஆறுதல் அடைவாரேயானால், அவருக்கு நான் தெளிவாகச் சொல்லியாக வேண்டும்: ‘கதை உங்களைப் பற்றியதுதான்!’ கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியக் கவிஞர் ஹோரஸ் லத்தீன் மொழியில் எழுதிய அங்கதக் கவிதையொன்றிலுள்ள வரிதான் இது.
அதுமட்டுமல்ல; ஜெர்மனியிலுள்ள தொழிற்சாலை நிலைமைகள் இங்கிலாந்தில் இருப்பதைவிட மோசமானதாக இருப்பதாகக் கூறும் மார்க்ஸ், நவீன முதலாளிய உற்பத்தி முறைகளால் ஏற்படும் கேடுகளுடன் பழைய உற்பத்தி முறைகளின் எச்சங்களும் சேர்ந்து ஜெர்மானியர்களை வாட்டி வதைப்பதாகக் கூறுகிறார்: “உயிரோடு இருப்பனவற்றால் மட்டுமின்றி இறந்துபோனவற்றாலும் அவதிப்படுகிறோம்.” கூடவே பிரெஞ்சுச் சொற்றொடரொன்றையும் சேர்க்கிறார். அந்த பிரெஞ்சுச் சொற்றொடரின் நேரடிப் பொருள், ‘இறந்தவன் உயிருள்ளவனைப் பிடித்துக்கொள்கிறான்’. இது பிரெஞ்சுச் சட்டம் தொடர்பான சொற்றொடர். அதாவது, நிலச்சொத்துடைய ஒருவன் இறந்தவுடனேயே அந்தச் சொத்து எந்த இடைவெளியும் இல்லாமல் அவனது வாரிசுகள் என உரிமை கோருபவர்களுக்கு வந்துசேர வேண்டும்.
சுரண்டல்களும் மெடூஸாவும்
இங்கிலாந்தில் கிடைத்தவற்றை ஒப்பிடும்போது, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் சமூகப் புள்ளிவிவரங்கள் மோசமானவை என்றாலும், தனக்குக் கிடைத்த அரைகுறைத் தகவல்களை விளக்க, அவருடைய அபிமான நாடகாசிரியர்களில் ஒருவரான எஸ்கைலஸின் நாடகங்களுக்கு அடிப்படையாக இருந்த கிரேக்கத் தொன்மங்களிலுள்ள பாத்திரங்களை உவமையாகப் பயன்படுத்துகிறார்:
“முகத்திரைக்குப் பின்னாலுள்ள மெடூஸாவின் தலை சற்றேனும் நம் கண்னுக்குப் படுமளவுக்கேனும் அவை முகத்திரையை விலக்குகின்றன”. மெடூஸா என்னும் அரக்கிக்குத் தலைமுடிக்குப் பதிலாக நச்சுப் பாம்புகள் இருக்குமாம்; அவளை நேருக்கு நேர் பார்ப்பவர்கள் கல்லாக உறைந்துபோய்விடுவார்களாம்.
அதாவது, ஜெர்மனியில் கிடைக்கும் அரைகுறை சமூகப்புள்ளி விவரங்களும்கூட மெடூஸாவைப் போல கொடூரமானவை. சமூகக் கேடுகள், பொருளாதாரச் சுரண்டல் ஆகியன பற்றிய உண்மையான புள்ளிவிவரங்கள் ஜெர்மனியில் கிடைக்குமானால், “உள்நாட்டு நிலைமை நம்மைத் திடுக்கிடச் செய்யும்” என்றும், அவை இல்லாத காரணத்தால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்றும் கூறுகிறார்: “ தன்னால் வேட்டையாடப்பட்ட அரக்கர்கள் தன்னைப் பார்க்காதபடி பெர்சியஸ் மாயாஜாலக் குல்லாயை அணிந்துகொண்டான். அரக்கர்கள் யாருமில்லை என்று மறுக்கும் வண்ணம் நாமும் மாயாஜாலக் குல்லாய்களை நமது கண்களையும் காதுகளையும் மறைக்குமளவுக்கு இழுத்து வைத்துக்கொள்கிறோம்.” பெர்சியஸும் கிரேக்கத் தொன்மத்திலுள்ள பாத்திரம்தான்.
தனது தாயை மனைவியாக்கிக்கொள்ள விரும்பும் ஓர் அரசன், பெர்சியஸை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், மெடூஸாவைக் கொன்று அவளது தலையைக் கொண்டுவருமாறு சொல்கிறான். மெடூஸாவை நேருக்கு நேர் பார்ப்பவர் எவரும் கல்லாகிவிடுவார்களாதலால் கண்ணாடியைப் போல் பிரதிபலிக்கக்கூடிய கவசமொன்றையும் மாயாஜாலக் குல்லாயொன்றையும் எடுத்துச் செல்கிறான் பெர்சியஸ். அந்தக் குல்லாயை மாட்டிக்கொள்பவர்கள் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்கள். மெடூஸாவின் பிம்பத்தை அந்தக் கவசத்தின் வழியாகப் பார்த்து அவளது தலையைக் கொய்யும் அவன், தேவைக்கேற்றபடி விரிந்து கொடுக்கும் பையில் போட்டு, மாயாஜாலக் குல்லாயை அணிந்துகொண்டு திரும்பி வந்து தனது தாயை மீட்கிறான்.
இந்த முகப்புரையின் இறுதியில், தனது நூலைப் பற்றிய அறிவியல்வகைப்பட்ட விமர்சனங்களை வரவேற்பதாகக் கூறுகிறார். ஆனால், “பொதுமக்கள் கருத்து என்று சொல்லப்படுவதன் விருப்புவெறுப்புகளைப் பொறுத்தவரை, நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை – முன் போலவே இப்போதும் ஃப்ளோரென்ஸ் நகரப் பெருங்கவிஞரின் மூதுரைதான் என்னுடையதும்: ‘நீ உன் வழியே செல், பேசுவோர் பேசட்டும்’. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலியக் கவிஞர் தாந்தேவின் நெடுங்கவிதையான ‘டிவைன் காமெடி’யின் மூன்று பகுதிகளிலொன்றான ‘பாவத்தைக் கழுவும் இடம்’ (பர்கேட்டரி) என்பதிலுள்ள ‘என்னைப் பின்தொடர்ந்து வா, பேசுவோர் பேசட்டும்’ என்னும் வாசகத்தை மார்க்ஸ் இங்கு சற்று மாற்றியுள்ளார்.
பணம் என்னும் சாபக்கேடு
‘மூலதனம்’ முதல் பாகத்தில், குழந்தைத் தொழிலாளிகளைச் சுரண்டுவதை முதலாளிகள் எப்படி நியாயப்படுத்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக, மார்க்ஸ், ‘வெனிஸ் நகர வர்த்தகன்’ என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் ஷைலக்கின் வார்த்தைகளை மூலதனமே பேசுவதாகக் காட்டுகிறார்.
‘பணம் அல்லது சரக்குகளின் சுற்றோட்டம்’ என்னும் அத்தியாயத்தில் மார்க்ஸ், உலகிலுள்ள எல்லா விஷயங்களையும், எல்லா மனிதர்களையும் சமதையாக்கும் ஆற்றலுள்ள பணத்தை வர்ணிக்க ஷேக்ஸ்பியரின் மற்றொரு நாடகமான’ ஏதன்ஸ் நகர திமோன்’ என்பதிலிருந்து சில வரிகளை மேற்கோள் கட்டுகிறார்: ‘மனிதர்கள் அனைவருக்குமான பொது வேசை’யே பணம்’. இதனை அடுத்து, பண்டைய கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர் சோஃபக்ளீஸின் ‘ஆண்ட்டிகனி’ நாடகத்தில் பணம் பற்றிக் கூறும் வரிகளையும் அடிக்குறிப்பாகத் தருகிறார். “பணம்! பணத்தை விட மனிதனுக்குப் பெரும் சாபக்கேடு ஏதும் இல்லை! அது நகரங்களைச் சிதைத்துத் தகர்க்கிறது; மனிதர்களை வீட்டை விட்டே துரத்துகிறது; நேர்மையான ஆன்மாவுக்கு ஆசைகாட்டி, மயக்கி, வெட்கக்கேடான, அவமானகரமான செயல்களுக்கு இட்டுச்செல்கிறது.” இவ்வாறு ‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தில் ஷேக்ஸ்பியர், சோஃபக்ளீஸ், தாந்தே, கதே, ஸெர்வான்டெஸ் போன்ற எண்ணற்ற இலக்கியவாதிகள் பவனிவருவதைப் பார்க்கலாம்.
உலகளாவிய ‘மூலதனம்’
இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டே ‘மூலதனம்’ நூலின் முக்கியமான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன என்றாலும் அவை உலகுதழுவிய தன்மையைக் கொண்டவை. உலகின் அனைத்துக் கண்டங்களிலும் நடைபெற்ற, நடைபெறும் சுரண்டலைச் சுட்டிக்காட்டுபவை. எடுத்துக்காட்டாக: “ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் அரசியல் ஆட்சி நடத்தியதுடன், தேயிலை வணிகத்திலும், பொதுவாக சீன வணிகத்திலும், ஐரோப்பாவுக்கும் ஐரோப்பாவிலிருந்தும் நடந்த சரக்குப் போக்குவரத்திலும் தனி முற்றுரிமை பெற்றது தெரிந்ததே. ஆனால், இந்தியாவின் கடற்கரையோரத்தைச் சுற்றி நடந்த வணிகமும், கிழக்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான வணிகமும், இந்திய உள்நாட்டு வணிகமும் கம்பெனியின் உயர் அதிகாரிகளின் முற்றுரிமையாக இருந்தன. உப்பு, அபின், பாக்கு மற்றும் இதர சரக்குகளின் மீதிருந்த முற்றுரிமைகள் வற்றாத செல்வச் சுரங்கங்களாக இருந்தன. அதிகாரிகளே தம் விருப்பப்படி விலையை நிர்ணயித்து, கெடுவாய்ப்புக்குட்பட்ட இந்தியர்களை இஷ்டம்போல் கொள்ளையடித்தனர். இந்தத் தனியார் வணிகத்தில் கவர்னர் ஜெனரலுக்கும் பங்கிருந்தது. அவருக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைத்தன. இந்த ஒப்பந்தங்களைக் கொண்டு வெறுங்காற்றைத் தங்கமாக்குவதில் அவர்கள் ரசவாதிகளையும் மிஞ்சிவிட்டனர். மலைபோன்ற செல்வம் காளான் போலத் திடீரென்று முளைத்தது… சலிவன் என்பவர் இந்தியாவில் அபினி சாகுபடி செய்யும் பகுதியிலிருந்து தொலைவான பகுதிக்கு அரசாங்கப் பணி தொடர்பாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது அபினிக்கான ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது. தமக்குக் கிடைத்த ஒப்பந்தத்தை பின் என்பவருக்கு 40,000 பவுண்டுக்கு விற்றார். பின் அதனை அதே நாளில் 60,000 பவுண்டுக்கு விறறார். அந்த ஒப்பந்ததைக் கடைசியாக வாங்கியவர் இத்தனைக்கும் பிறகு தமக்குக் கொழுத்த லாபம் கிடைத்ததாகக் கூறினார்… 1769-க்கும் 1770-க்கும் இடையில் ஆங்கிலேயர்கள் அரிசி முழுவதையும் வாங்கிவைத்துக்கொண்டு, கொள்ளை விலை கிடைத்தாலன்றி அதை மீண்டும் விற்க மறுத்து, பஞ்சத்தை உருவாக்கினார்கள்.”
ஆக, மார்க்ஸ் கூறியதைப் போல “உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் ரத்தமும் அழுக்கும் சொட்டச் சொட்ட உலகில் பிரவேசி’ப்பதுதான் மூலதனம்.
வேதமோ ஆருடமோ அல்ல
மார்க்ஸின் ‘மூலதனம்’ வேத நூலோ ஆருட நூலோ அல்ல. மேற்கு நாடுகளில், பாட்டாளி வர்க்கம் தவிர்க்க முடியாதபடி புரட்சிகர வர்க்கமாக உருவெடுத்து முதலாளிய அமைப்பைத் தூக்கியெறியும் என்று ‘மூலதனம்’ நூலில் அவர் கூறியது நிறைவேறவில்லை. ஆனால், தொழில் வளர்ச்சியடைந்த ‘மைய’ நாடுகள் தொழில்வளர்ச்சி குன்றிய ‘ஓர’ நாடுகளின் மூலவளங்களையும் உழைப்பாளிகளின் உழைப்பையும் சுரண்டுவதைப் பற்றியும், இந்த இருவகை நாடுகளுக்குமிடையே சரக்குப் பரிவர்த்தனையிள் உள்ள ஏற்றத்தாழ்வையும் பற்றி அவர் எழுதியவை இன்னும் பொருத்தப்பாடு உடையவை. இந்த ‘ஓர’ நாடுகளில் பல்வேறுவகைச் சுரண்டலுக்கும் ஏற்றத்தாழ்வான பரிவர்த்தனைகளுக்கும் உட்படும் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், தலித் மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோரையும் ‘பாட்டாளி வர்க்க’த்தில் சேர்ப்பதற்கு மார்க்ஸின் ஆய்வுமுறைகள் இடம் கொடுக்கின்றன. பிரிட்டிஷ் எழுத்தாளர் ஃபிரான்ஸிஸ் வீன் கூறியது போல “மூலதனம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும்போது ‘தாஸ் கேப்பிட்டல்’ எப்படி முடிவு பெறும்?”
உலகின் மகத்தான சிந்தனைப் பெட்டகங்களுள் ஒன்றான ‘மூலதனம்’ நூலின் முதல் பாகம் வெளியாகிக் கடந்த செப்டம்பர் 14-ம் தேதியோடு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கின்றன. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்தத் தருணத்தைத் தமிழ்நாட்டு மார்க்ஸியர்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் விட்டது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது! -எஸ்.வி. ராஜதுரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > வரலாறு > மூலதனம் என்னும் கலைப் படைப்பு
மூலதனம் என்னும் கலைப் படைப்பு
posted on
You Might Also Like
பிரஞ்சியரின் ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை
November 10, 2024
அன்னியமாதல்
October 20, 2024
கீழூர் வாக்கெடுப்பு
October 18, 2024
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்
October 4, 2024
பாகூர் பகுதி சிபிஐ(எம்) கட்சி வரலாறு
September 9, 2024