ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க உடனடி நடவடிக்கை எடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி மாநில குழு

பத்திரிகைச் செய்தி 17.03.2025

புதுச்சேரி அரசே! ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க உடனடி நடவடிக்கை எடு!

புதுச்சேரி மாநிலத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஆட்டோ தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை காக்க நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அரசு அதிகாரிகளிடமும், முதல்வரிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பல கட்ட போராட்டங்களில், மாண்புமிகு முதல்வர் முதல் அதிகாரிகள் வரை அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், அவர்களை நம்பி போராட்டங்களை திரும்பப்பெற்ற வரலாறு உண்டு. அவர்கள் ஆட்சியாளர்களை நம்பி இருந்ததற்கு  பலன் ஏதும் கிடைக்கவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனவே, பின்வரும் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்:

* அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம்: அரசாணை வெளியிடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த வாரியத்திற்கு உடனடியாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

* ஆட்டோ கட்டண ஒழுங்குமுறை: ஆட்டோ கட்டணத்தில் நிலவும் குளறுபடியை நீக்க, அரசு சார்பில் செயலியை அறிமுகப்படுத்தி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.

* சட்டவிரோத வாடகை வாகனங்கள்: சட்டவிரோதமாக செயல்படும் இருசக்கர வாகன வாடகை நிலையங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

* கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்: ஆட்டோ தொழிலை சூறையாடும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பல்வேறு முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

புதுச்சேரி துணை ஆளுநரும், முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே பலமுறை பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களை மீண்டும் ஏமாற்ற வேண்டாம். இது அவர்களை தீவிரமான போராட்டங்களுக்கு தள்ளும்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஆட்டோ கட்டண ஒழுங்குமுறை செயலியை அறிமுகப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்,
செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  புதுச்சேரி.

Leave a Reply