தீண்டாமை ஒழிப்பு முன்னணி பயிற்சி

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி பயிற்சி வகுப்பு 27.06.2026 அன்று நடைபெற்றது.  முன்னணியின் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் நா. கொளஞ்சியப்பன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். தோழர் வி உமா விநாயகம் அவர்கள்  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்கள். புதுச்சேரி  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் தோழர் வீர. அரிகிருஷ்ணன்   பயிற்சி வகுப்பின் அவசியத்தையும் நோக்கங்களையும் விவரித்து உரையாற்றினார்கள். இந்த வகுப்பில் சுமார் 100 பேர்களுக்கு மேல் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு செயற்குழு உறுப்பினரும் டி எஸ் எம் எம் என்று சொல்லக்கூடிய அனைத்திந்திய  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர் கே சாமுவேல்ராஜ் அவர்கள் பயிற்சி கொடுத்தார்கள்.  இந்த பயிற்சி வகுப்பில் அவர் உரையாற்றிய போது, இந்த சாதிய கட்டமைப்பில் சாதியையும் தீண்டாமையையும் ஒழிப்பதற்கு பல்வேறு வழிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இந்த சாதிய கட்டமைப்பில் சாதியை பாதுகாப்பதற்கான பல்வேறு அம்சங்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் நாம் நடைமுறை வாழ்க்கையில் மாற்றி அமைக்கின்ற பொழுது சாதியும் அதனுடைய தீண்டாமை என்கிற கொடிய மனநிலையும் மாறுகின்ற ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும்.   சமூகத்தோடு இயங்குகின்ற பல்வேறு நிலைகளிலும் நம்முடைய சொந்த வாழ்க்கையிலும்  நாம் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.  தீண்டாமை என்பது சாதிய தன்மையிலிருந்து வந்தாலும் சாதியை விட தீண்டாமை என்பது மிகவும் கொடுமையானது. 

நாம் மேலோட்டமாக சாதியை குறித்து பேசிவிட்டு  செல்லலாம்.  ஆனால் தீண்டாமை என்ற கொடிய குணம் சமூகத்தில் இருக்கிற நிலையில் திண்டாமையை ஒழிக்க நாம் களமாடுகிற பொழுது  களத்தில்நேரடியாக பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.  குறிப்பாக நாமெல்லாம் சாதி ஒழிப்பு குறித்து பேசுவது அல்லது உரையாடுவது மிகவும் எளிது.  ஆனால் அதை ஒழிப்பதற்கு நடைமுறை வாழ்க்கையில் செயல்படுகிற பொழுது அது ஒரு   முள் புதர்களின்  மேல் நடப்பது  போன்றதாகும். நம்முடைய இளைஞர்கள் சாதியை மறுத்து காதல் செய்கின்ற பொழுதும்  காதல் திருமணம் செய்வதற்கு  முன் வருகிற பொழுதும் அவர்கள் பெற்றோர்களாலும்  சமூகத்தாலும் மிகக் கொடுமையான எதிர்ப்புகளையும் தாக்குதல்களையும் சந்திக்க வேண்டி இருக்கிறது.  இந்த எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், பெற்றோர்களே தங்களுடைய மகனையோ மகளையோ ஆணவ படுகொலை செய்கிற அளவுக்கு கொடுமையானது.     தீண்டாமை ஒழிப்பு என்பது  சாதி ஒழிப்பை விட மிகவும் கடுமையானது என்பதை உணர முடியும்.  ஒரு சாதிக்குள்ளேயே திருமணங்களை நடத்துவது அல்லது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அகத் திருமணங்களை பாதுகாப்பது சாதிய கட்டமைப்பை பாதுகாக்கிற ஒன்றாகும். மனிதர்களுடைய திருமண உறவு சாதி தாண்டிய ஒரு குடும்பத்தை உருவாக்குகிறது.  அதனால் தான்  அகமன திருமணத்தை  நம் சமூகம் பாதுகாக்க விரும்புகிறது. இரண்டு இளைஞர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் விரும்புகின்ற பொழுது அவர்கள் நண்பர்களாக பழகுகிறார்கள் அப்போது அவர்கள் அவர்களுக்குள் ஏற்படுகின்ற புரிதல்கள் காரணமாக காதலர்களாக  மாறுகிறார்கள்.  பிறகு திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பமாக வாழ விரும்புகிறார்கள்.

அப்பொழுது பல்வேறு எதிர்ப்புகளையும் தாக்குதல்களையும் சந்திக்கிறார்கள்.  இதுவரையில்  நம் சமூகத்தில் கட்டி அமைக்கப்பட்ட  பிற்போக்குத்தனமான அறிவியல் தன்மைகளுக்கு எதிரான பழக்க வழக்கங்கள் இந்த சாதியை கட்டமைப்பை பாதுகாக்க விரும்புகிறது.  ஆகவே நாம் அறிவியல் தன்மைகளையும் முற்போக்கு பண்புகளையும் உயர்த்துப்பிடிப்பதற்கு தேவையான அனைத்து கருத்து பிரச்சாரங்களும் செய்ய வேண்டியது அவசியமாகிறது.   நாம் களத்திலும் கருத்து தளத்திலும் செயல்பட வேண்டி இருக்கிறது.  பொதுமக்கள் மத்தியில் இந்த சாதிய கட்டமைப்பை உடைக்கிற அளவில் பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு கருத்தரங்களையும் தெருமுனை பிரச்சாரங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த வேலைகளை எல்லாம் ஒரு தனி நபர் செய்துவிட முடியாது. இதற்கு ஒத்த கருத்துள்ள அனைத்து அமைப்புகளையும் தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களையும் முற்போக்கு சிந்தனை கொண்ட அனைத்து கலை இலக்கிய அமைப்புகளையும் ஒன்று திரட்ட வேண்டும்.  கலாச்சாரம்  மற்றும் பண்பாட்டு தளத்தில் இயங்குகின்ற முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,  இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  இந்திய தொழிற்சங்க மையம் ஆகிய வர்க்க வெகுஜன அமைப்புகள் எல்லாம் ஒரு மேடையாக திரண்டு இந்த சாதியை கட்டமைப்பையும் தீண்டாமையையும் ஒழித்திட திட்டமிட்டு முயல வேண்டும் என்று தோழர் கே சாமுவேல்ராஜ் அவர்கள் உரையாற்றினார். 

இது போன்ற பல்வேறு அம்சங்களை எல்லாம்  விளக்கி வகுப்பில் உரையாற்றியது மிகவும் சிறப்பானதாக இருந்தது.  பங்கேற்ற அனைவரும் கடைசிவரை இருந்து இந்த அற்புதமான திண்டாமை ஒழிப்பு குறித்த பயிற்சியை பெற்றது, புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக பி எஸ் என் எல் அலுவலர் சங்கத்தின் தலைவர் தோழர் சண்முகசுந்தரம் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றி நிறைவு செய்தார்கள்.

Leave a Reply