பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
புதுச்சேரி அரசு புதுச்சேரி
மதிப்பிற்குரியீர்
பொருள்: -அதிகார வன்மத்தை தவிர்த்தல்- தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014 பின்பற்றுதல் – ராஜஸ்தான் மாநிலம் பலோடி சாலை விபத்து குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுதல் தொடர்பாக …..
வணக்கம். ராஜஸ்தான் மாநிலம் பலோடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் (2025) நடந்த கோர விபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலை செயல்படுத்த 2026 மே 6 தாங்கள் தலைமையில் உயர்மட்ட முதல் கூட்டம் நடந்துள்ளதை வரவேற்கிறோம். புதுச்சேரி மாநிலத்தில் தற்போதைய நிலைமையில் சுமார் 30 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மதுவணிகம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் மாநில, மாவட்ட சாலைகளாக வகை மாற்றப்பட்டு விட்டன. ஆகவே, சிறிய அளவிலான தேசிய நெடுஞ்சாலை இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலை உறுதியாக அமலாக்க வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 2 முதல் 22ஆம் தேதி வரை நகர மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஆக்கிரமிப்பை அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டு மேற்படி நடவடிக்கை நடந்து வருகிறது. இப்பணி அதிகார வன்மத்துடன் உயிர் வாழ்வதற்காக நேர்மையாக உழைத்து வருமானத்தை ஈட்ட முற்படும் எளிய மக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 14 அனைவருக்கும் சமவாய்ப்பை, சமத்துவ உரிமையை வலியுறுத்துகிறது என்பதை கவனப்படுத்த விரும்புகிறோம்.
உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி 2022- 23 ல் நாட்டின் மொத்த செல்வங்களில் 40 சதவீதத்தை மக்கள் தொகையில் முதல் 1 சதவீதம் பேர் வைத்திருந்தனர். ஆனால் அடிமட்ட 50 சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த செல்வங்களில் மூன்று சதம் மட்டுமே உள்ளது. தற்போதைய உலக நிலைமையில் மேலும் மோசமான நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய நிலைமையின் பிரதிபலிப்பை புதுச்சேரியில் பார்க்க முடிகிறது.
புதுச்சேரியில் புதிய தொழில்கள் இல்லை. பல தொழிற்சாலைகள் மூடப்படுகிறது. விவசாய விளைநிலங்கள் ஆட்சியாளர்களின் கொள்கையால் வெகுவாக குறைந்து வருகிறது. வேலையின்றி வருமானமின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள் கடன் பெற்று சிறு முதலீடு செய்து சாலையோரத்தில் வணிகம் செய்யும் மக்களை துன்புறுத்துவது, கடைகளை அப்புறப்படுத்துவதால் வேறு ஒரு மனநிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஆகவே
- 1.மாவட்ட நிர்வாகம் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பு மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014 ஐ உறுதியாக செயல்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
- 2 சாலை போக்குவரத்து நெருக்கடிகளை குறைத்திட பொது போக்குவரத்தை வலுப்படுத்திட வேண்டுகிறோம். இருசக்கர வாகன வாடகை நிலையத்தை தடை செய்திடவும் வேண்டுகிறோம்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அந்நியமதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபான கடைகளை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டுகிறோம்.
- பிரதான சாலையோரம்அமைந்துள்ள மது கடைகள் அருகில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதை ஒழுங்கு படுத்திட வேண்டுகிறோம்.
- ஆறு ஏரி குளம் கால்வாய் மற்றும் அரசு சொத்துக்களை ஆக்கிரமிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் . மக்களின் கருத்தரிந்து பொருத்தமான கொள்கை உருவாக்கிட வேண்டும்.
- நகர அமைப்பு குழுமத்தின் விதிக்கு உட்பட்டு திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் , பெரிய வணிக வளாகங்கள் அமைவதையும் வாகன நிறுத்தங்கள் வசதியை உறுதிப்படுத்தவும் வேண்டுகிறோம்.
- வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கு சாலையோரங்களில் நிறுத்தப்படுகிறது இவர்களுக்கு என தனியான வாகன நிறுத்த இடங்களை கட்டமைத்திட வேண்டும் .
மேற்கண்ட அம்சங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது எளிய மக்களின் சாலையோர வியாபாரத்தை பாதுகாக்கவும் ஒழுங்குபடுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
நன்றி இப்படிக்கு
எஸ். ராமச்சந்திரன் மாநில செயலாளர்



