மாநிலக் குழு தீர்மானம்

பத்திரிகை செய்தி
அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு தீர்மானம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு கூட்டம், 03.07.2026 அன்று தோழர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. அமைச்சரவை விரிவாக்கம்:
தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்தும், புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படாதது, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படாதது, ஆளுநர் உரை நிகழ்த்தப்படாதது ஆகியன கடும் கண்டனத்திற்குரியவை. பா.ஜ.க. – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியின் அதிகாரப் போட்டி மற்றும் சுயநலத்தால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. உடனடியாகத் துறைகளை ஒதுக்கி, சட்டமன்றச் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
2. குடிநீர் பிரச்சினை:
புதுச்சேரி நகர்ப்பகுதிகளில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான கொள்கைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி, மக்கள் பங்கேற்கும் கண்டன இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்.
3. மக்கள் விரோத நடவடிக்கைகள்:
மின்துறை தனியார்மயமாக்கலின் ஒரு பகுதியாக மக்களை மிரட்டி  ப்ரீபெய்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்த வேண்டும்.   கல்வித்துறையில் இந்தி-சமஸ்கிருத மொழித் திணிப்பு மற்றும் தாய்மொழிப் புறக்கணிப்பு ஆகியவற்றைத் தொடரக்கூடாது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இக்கொள்கைகளை எதிர்த்து, இடதுசாரி மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும்.
4. ரேஷன் கடை விவகாரம்:
‘டிஜிட்டல் காயின்’ என்ற பெயரில் ரேஷன் கடைகளை மூடும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமான ரேஷன் கடைகளைத் தொடர்ந்து பாதுகாக்கப் போராடுவோம்.
5. போலி மருந்து ஊழல்:
போலி மருந்து தயாரிப்பு ஊழல் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சி.பி.ஐ. விசாரணை நேர்மையாகவும் விரைவாகவும் நடைபெற்று, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
6. எம்.ஆர்.எப். தொழிலாளர் பிரச்சினை:
எம்.ஆர்.எப். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணி நிரந்தர ஆணையை வழங்காமல், சட்டவிரோதமாகக் கதவடைப்பு (Lockout) செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். காவல்துறை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதை நிறுத்தி, தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும், ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் புதுச்சேரி முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் தெருமுனைப் பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்,
மாநில செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி மாநிலக் குழு.

Leave a Reply