100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாகூர் கொம்யூன் முழுவதும் செயல்படுத்த கோரி விவசாய தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது.
வேலையின்மை வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்க, தேசிய கிராமப்புற ஊரக உறுதி வேலை திட்டத்திற்காக ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ஒன்றிய  பாஜக அரசு ஒதுக்க வேண்டும். புதுச்சேரி பாகூர் கொம்யூன் அனைத்து கிராமங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஆண்டுக்கு 200 நாள்களாக வேலையை உயர்த்தி நாளொன்றுக்கு கூலியாக ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில துணை தலைவர் சுப்ரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். புதுச்சேரி பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் தட்சணாமூர்த்தி, நிர்வாகிகள் ஹரிதாஸ் சரவணன் செல்வராஜ் முருகையன், முத்துலிங்கம், வளர்மதி உள்ளிட்ட திரளான விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக விவசாயத் தொழிலாளர்கள் மண்வெட்டி, கடப்பாரை, பாண்டு ஆகிய உபகரணங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக துணை தாசில்தார் விமலன் சந்தித்து சங்க தலைவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். கோரிக்கை மனு   மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார், சங்க தலைவர்களிடம் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply