கடந்த எட்டு ஆண்டுகால மத்திய பிஜேபி ஆட்சியாலும் கடந்த இரண்டு ஆண்டுகால பிஜேபி என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியாலும் புதுச்சேரி மக்கள் கொடும் துன்பத்தை அனுபவத்து வருகிறார்கள். அமைதியான புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மத ஒற்றுமை கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்/ பாஜகவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் பி.பி.சி நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட “இந்தியா: மோடிக்கான கேள்விகள்” (India: The Modi question) என்ற ஆவணப் படத்தை தயாரித்துள்ளது.
“குஜராத்தில் 2002ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் இங்கிலாந்து குடிமக்கள் மூன்று பேர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொள்ளப்பட்டதை, வன்முறை மற்றும் கொலைகளைத் தடுக்க அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி தவறிவிட்டார் என்பதையும்; கலவரத்தைத் தடுக்கவேண்டிய காவல்துறையினரையும் அரசு நிர்வாகத்தையும் அவர் தனது அதிகாரத்தால் முடக்கிப்போட்டு கலவரக்காரர்கள் சுதந்திரமாக வெறியாட்டம் போட அனுமதித்தார்” என்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றியும் பல்வேறு ஆதாரங்களுடன் இப்படம் முன்வைக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், பிரிட்டன் அரசு நடத்திய விசாரணை, பிரிட்டிஷ் அரசின் ரகசிய ஆவணங்கள், உண்மையை வெளிப்படுத்திய அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மர்மச்சாவு, சிறையிலடைக்கப்பட்ட காவல் அதிகாரிகள் என படம் தொட்டுக்காட்டுகிறது.
இந்த படம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எழுந்துள்ள சவாலை சுட்டிக்காட்டுகிறது. குஜராத் இனப்படு கொலைகளையில் ஈடுபட்டவர்கள் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒன்றிய அரசாங்கம் இந்த ஆவணப்படத்தின் மீது அச்சம் கொண்டு, இணைய வெளியிலிருந்தே அகற்றி வருகிறது. அதற்காக ஐ.டி.சட்டத்தின் பிரிவுகள் (அவசரகால) தவறாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கை தவறானது, சட்ட விரோதமானது.
இந்த நிலையில், இணையத்தில் பார்க்க முடியாத ஆவணப்படத்தை ஆங்காங்கே பொதுமக்களும், ஜனநாயக அமைப்புகளும் திரையிடல் செய்து பார்த்து வருகிறார்கள். புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைகழத்தில், மாணவர் சார்பில் ஆவணப்பட திரையிடல் செய்வதை, பல்கலைக்கழக நிர்வாகம் மின்சாரம் மற்றும் இணைய வசதி துண்டித்தும் பாஜக கட்சியின் எபிவிபி குண்டர்கள் புதுச்சேரி பல்கலைகழத்தில் அத்துமீறி நுழைந்து இந்தியில் மாணவர்களை பார்த்து சுட்டுக் தள்ளுங்கள் என்று கத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் அதுவும் காவல்துறையின் உதவியுடன்.
ஆவணப்படத்தை பார்த்து தகவல்களை தெரிந்துகொண்டு அதன் மீது முடிவு மேற்கொள்வது இந்திய குடிமக்களுக்கு உள்ள அடிப்படையான உரிமை ஆகும். ஆனால் அடிப்படை உரிமைக்கே விரோதமாக காவல்துறையும், கல்வி நிறுவனங்களும் செயல்பட்டுள்ளன இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்கு வன்மையாக கண்டிக்கிறது. பல்கலைக்கழகம், காவல்துறையின் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை. வன்முறையில் ஈடுபட்ட பிஜேபி கட்சியின் எபிவிபி குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டுகிறோம்.
புதுச்சேரி முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் முன்னின்று ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம். பொதுமக்களின் பார்வையில் இருந்து உண்மைகளை மறைப்பது மென்மேலும் பிற்போக்கான சூழலுக்கே நாட்டை இட்டுச் செல்லும் எனவே, புதுச்சேரி மக்கள் அனைவரும் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும் புதுச்சேரி அரசும், காவல்துறையும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என அழுத்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
(இரா.இராஜாங்கம்) மாநிலச் செயலாளர்
