புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

சுப்பையாவும், பாரதிதாசனும், பாரதியும் வாழ்ந்த புதுச்சேரியில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு என சமூகக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகள் கையெறி குண்டு, கைத்துப்பாக்கி என நவீன கொலை ஆயுதங்களை கையாளுகிற அளவிற்கு குற்றத்தின் தன்மை உச்சத்தை எட்டியுள்ளது.

மாநிலத்தில் சமூகவிரோதிகளை ஒடுக்கி அமைதியை நிலைநாட்ட வேண்டிய மாநில அரசு மந்தகதியில் செயல்படுகிறது. மாநில துணைநிலை ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்ட்த்திற்கு விரோதமாக, அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறார்.

மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதரக் கொள்கை அனைத்துப் பகுதி மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. நகர்புற, கிராமப்புற வறுமையும், வேலையின்மையும் வளர்ந்து சமூகக் குற்றங்கள் பெருகிட வழிவகுத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையினை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் சமூக விரோதிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு, நிலவணிகம், நிலம் மற்றும் வீடுகள் அபகரிப்பு போன்றவற்றில் ஆதாயம் அடைந்துவருகிறார்கள். இந்த போக்கு வளர்ந்து பிரான்சு குடியுரிமை பெற்றவர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்களிடம் சமூகவிரோதிகள் மிரட்டி பணம் பறிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தைப் பார்த்து சமூகவிரோதிகள் அச்சப்படுவதில்லை. சிறைச்சாலைகளும் ரௌடிகளுக்கு பாதுகாப்பையும், சௌகரியங்களை வழங்கும் இடமாகவே உள்ளது. ஆகவே, சமூகவிரோதிகள் தொடர்ந்து குற்றங்களை துணிந்து செய்துவருகிறார்கள். முந்தைய திமுக, காங்கிரஸ் ஆட்சிகள் தொடங்கி தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிவரையில் சமூககுற்றங்கள் தொடர்ந்துவருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் நடைபெறும் சமூகக்குற்றங்களின் மீது உயர்நீதிமன்றம் தலையிடும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது.

இந்தப் பின்னணியில் மாநிலத்தில் சமூகக்குற்றங்களை கட்டுப்படுத்திட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மாநில துணைநிலை ஆளுநரும் இணைந்து செயலாற்றிட வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் மாநில் அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முனைப்புகாட்டவில்லை. மறுபுறத்தில் துணைநிலை ஆளுநர் அவர்கள் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் செய்வேன், இனிமேல் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடுவேன் என்று பேசுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாகும். இத்தகைய அணுக்குமுறையை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

எதிவரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்ற, தனக்குப் பணிக்கப்பட்ட செயல்திட்டத்தோடு செயல்படுவதாகத் தோன்றுகிறது. இது தவறான முன்னுதாரணமாகும். இதனால் பாதிக்கப்படுவது மாநில மக்களாகும்.

ஆகவே, மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் சமூகக்குற்றங்களைக் கட்டுப்படுத்திட, மாநிலவளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திட இணைந்து செயலாற்றிட முன்வரவேண்டும். சமூகவிரோதிகளை சட்டத்தைப் பாத்து அச்சப்படுகிற வகையில் அரசியல் துணிவுடன் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சமூகவிரோதிகளுக்கு துணைபோகும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் வருமானத்திற்கு அதிகமான சொத்துகுவிப்பு குறித்து விசாரணை செய்திடவேண்டும். சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தும் கூடமாக மாற்றிடவேண்டும். மாநிலத்தில் வறுமை, வேலையின்மையை மட்டுப்படுத்த வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பாதுகாப்புக்கு துப்பாக்கி கேட்டு மனுகொடுப்பது, வரிகொடா இயக்கம் நடத்துவது என்ற வணிகர்கள் சங்கத்தின் முடிவு பொருத்தமற்றது.. ரௌடிகளிடம் இருந்தும், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டில் இருந்தும் உள்நாட்டு சில்லரை வர்த்தகத்தை பாதுகாத்திட மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தவறான கொள்கைக்கு எதிரான ஒன்றுபட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு கேட்டுக்கொள்கிறது. புதுச்சேரி சட்டஒழுங்கு நிலைமையை சீர்செய்திட அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டிடவும் மாநில அரசை புதுச்சேரி பிரதேச செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இவண்
{ வெ. பெருமாள் }
பிரதேச செயலாளர்

Leave a Reply