காரல் மார்க்ஸின் மூலதனம்

உலகை குலுக்கிய புத்தகம் – 2

1970-ஆம் ஆண்டு நான் பொருளியல் முனைவர் பட்டம் பெற ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில்  கார்ல் மார்க்ஸ் படைப்புகள்இடம் பெறவேயில்லை. மார்க்ஸ் ஒரு பொருளாதார அறிஞர் என்பதை அறிய வந்த எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது.  பத்து பேர் சேர்ந்து ‘மூலதனம்’ என்ற நூலை, வாரம் ஒருமுறை கூடி தொடர்ந்து படித்து வந்தனர். நானும் அதில் சேர்ந்தேன். பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருந்த எனக்கு, மூலதனம் ஒரு அற்புதமான, முன்பின் முரணற்ற, மாபெரும் சமூக, பொருளாதார ஆய்வுப் படைப்பு என்பது விரைவிலேயே புரிந்தது.
எனக்கு உலகைப் பற்றி, மானுட வரலாற்றைப் பற்றி, குறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்க விதிகளைப் பற்றி மகத்தான வெளிச்சம் அளித்த நூல் மூலதனம். அறிவுபூர்வமாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மூலதனம் என் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மானுட வரலாற்றிலும் வாழ்விலும் மனித உழைப்பின் மையமான, மகத்தான பங்கு, வர்க்க சமுதாயங்களில் உழைப்பு சுரண்டப்படுவது, முதலாளித்துவ அமைப்பின் உபரி மதிப்பு மற்றும் லாபத்தின் ரகசியம், போட்டி முதலாளித்துவம் ஏகபோகமாக மாறுவது, மானுட விடுதலையின் ஒருபடியாக நிலப்பிரபுத்துவத்தைத் தாண்டி வரும் பொழுது செயல்பட்ட முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து, முழு மனித விடுதலைக்கான சோஷலிஸ உற்பத்தி அமைப்பு உருவாவதன் தவிர்க்க முடியாத அவசியம்.
இந்த மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம், உள்ளிட்ட ஏராளமான அற்புதமான புதிய விசயங்களை எனக்குப் புரிய வைத்தது மார்க்ஸின் மூலதனம்.
மிக முக்கியமாக இங்கு கூற வேண்டியது, ‘மூலதனம்’ சிறந்த இலக்கியப்படைப்பு என்பதாகும். அது எழுதப்பட்டது ஜெர்மன் மொழியில். நான் படித்தது ஆங்கில மொழியாக்கம். இருந்தும் கூட ஆங்கில ஆக்கத்திலேயே அற்புதமான கவிதை போன்று மூலதனம் நூலின் பல பகுதிகள்எனக்குப் பட்டன.மூலதனம் என் வாழ்வில் எனக்கு, ஆகப்பெரிய மகிழ்ச்சியும், புரிதலும், விழிப்புணர்வும் அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு முறை மீண்டும் படிக்கும் பொழுதும் புது வெளிச்சம் தருகிறது. சோஷலிஸ  பொதுவுடைமை லட்சியங்களுக்காகப் பாடுபட உத்வேகமும் புத்துணர்ச்சியும் தருகிறது. –  Venkatesh Athreya
https://thamizhbooks.com/product/moolathanam-katpom/

Leave a Reply