அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை செய்க.
மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கா போக்கை கைவிடுக.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்று மாநில மக்களின் நீண்டகால கனவாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி (left-wing) மற்றும் ஜனநாயக (democratic) இயக்கங்கள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக 2010-11-இல் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது.
அரசு மருத்துவக்கல்லூரி ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் நேர்மையற்ற அணுகுமுறையால் தொடர்ந்து பல சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. கட்டுமானப் பணியில் ஊழல், பணி நியமனத்தில் முறைகேடு, ஒவ்வொரு ஆண்டும் விதிமுறை மீறல்களால் அங்கீகாரம் பெறுவதில் தாமதம், மாணவர் சேர்க்கையில் தாமதம், அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல் என ஊழலும், முறைகேடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் மலிந்துள்ளது. இதற்கு அரசும், சம்மந்தப்பட்ட அதிகாரிகலும்தான் முழுப்பொறுப்பாகும்.
அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் NRI இட ஒதுக்கீட்டில் மிகப் பெரிய முறைகெடுகள் நடைபெற்றுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றன. ஆனால் ஆட்சியாளர்கள் நடந்த தவறுகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதோடு தற்பொழுது அரசு கல்லூரி நிர்வாகம் மாணவர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண் (Internal marks) சம்மந்தப்பட்ட பேராசிரியர்களால் வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த மதிப்பெண்களை எந்த கல்லூரி நிர்வாகமும் குறைப்பதில்லை. சில ஆசிரியர்களின் மனநிலைக்கு தக்கபடி மதிப்பெண் வழங்குவதும், சிலர் தவறான முறையில் மாணவர்களை கட்டாய படுத்துவதும் உண்டு. மாணவிகளாக இருந்தால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதும் சில சந்தர்பங்களில் உண்டு. மேலும் இன்டர்னல் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் எழுத்துத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதும் உண்டு.
ஆனால் அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்களில் 11 பேர் இன்டர்னல் மதிப்பெண் 25க்கு 14க்கும் கீழ் பெற்றதாக கொல்லி தேர்வு எழுத மறுக்கப்படுகிறார்கள். இன்டர்னல் குறைவாக இருந்தாலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் வாய்பு பறிக்கப்படுகிறது. 18 மாணவர்கள் வருகை குறைவு என தேர்வு எழுத மறுக்கப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எந்த அளவைக் கொண்டு சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மதிப்பெண்கள் வழங்குகிறார்கள் என்பது குறித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்களின் செயல்பாடு குறித்தும் விசாரணை செய்திட வேண்டும். இன்டர்னல் மதிப்பெண் குறைவாக இருந்தாலும் எழுத்து தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்கும் கடந்த கால நடைமுறையை உறுதிபடுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மாநில முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுதுவதை உறுதிபடுத்திட வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியை தரமான கல்வி நிறுவனமாக தரம் உயர்த்திட வேண்டும். இதுவரை நடந்துள்ள ஊழல், மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்தி சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கட்சி அரசை கேட்டுக் கொள்கிறது.
– R. ராஜாங்கம், செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதுச்சேரி.