பத்திரிக்கை செய்தி 27.06.2022
அம்பானி, அதானிகளுக்கு, புதுச்சேரி நிலத்தை ஒப்படைக்க ஆளுநருக்கு அதிகாரமா ?
புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்த சீராய்வு கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை கவர்னருக்கு வழங்கிட ஆலோசிக்கப்பட்டது இது புதுச்சேரி மாநிலத்திற்கும், மக்களுக்கும் பாதகமான பல விளைவுகளை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது. தற்பொழுது நிலம் எடுக்கவும், தேவைகளுக்கேற்ப ஒதுக்கவும், மக்களுக்கு கொடுக்கவும் ஆன அதிகாரம் சட்டமன்றத்திற்கு தான் உண்டு. பட்டா மாற்றம் நிலத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது நிலத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுப்பது குடியிருப்போருக்கு அதை உரிமை ஆக்குவது ஆகிய சட்டங்கள் அமலில் உள்ளன. இவைகள் மத்திய அரசின் நிர்வாகியான துனைநினை ஆளுநர் கைக்கு மாறினால் புதுச்சேரியில் கையகப்படுத்தி பயன்படுத்தப்படாமல் கரசூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அம்பானி, அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி மக்களின் தேவைகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றப்படுவது தான் சரியான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியும் அதில் தவறுகள் முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மக்கள் அவர்களை பொறுப்பாக்குவார்கள். நிலம் கையகப்படுத்தும் மற்றும் விநியோகிக்கும் பொறுப்பு ஆளுநர் கைக்கு மாறினால் யார் அவரை கேள்வி கேட்க முடியும் . அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி இல்லை என்ற வகையில் மக்களுக்கு பதில் சொல்லும் தார்மீக கடமை ஆளுநருக்கு அவசியமில்லாத ஒன்றாகிவிடும். வேடிக்கை என்னவென்றால் இந்தக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் இதற்கு எவ்வித ஆட்சேபணையும் தெரிவித்ததாக தெரியவில்லை.
அந்த அளவிற்கு அவர் பதவியில் நீடிப்பதற்காக சூழ்நிலை கைதியாக மாறி வழக்கம்போல் மௌனம் காத்திருக்கிறார். மாநில உரிமை காக்க அந்தக் கூட்டத்தை முதல்வர் புறக்கணித்து வெளியேறி இருக்க வேண்டும். ஏற்கனவே ஒன்றிய அரசு.
மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் நேரடியாகவும் ஆளுநர் மூலமாகவும் பறித்து வரும் நிலையில் நிலம் சம்மந்தமான அதிகாரம் ஆளுநரிடம் செல்வது பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் . ஊழல், கமிஷன், முறைகேடுகள், அத்துமீறல்கள் சகஜமாகிவிடும். எனவே தற்போதுள்ள படியே நிலம் சம்பந்தமான அனைத்து அதிகாரமும் மாநில அரசிடமே நீடிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி பிரதேச குழு வலியுறுத்துகிறது.