துணைநிலை ஆளுநர் – முதல்வர் அரசியல் கபட நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்  – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் புதுச்சேரியில் அனைத்து திட்டங்களும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் , இரட்டை எஞ்சின் ஆட்சியால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றெல்லாம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்தும் வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசாங்கம் கடந்த ஆண்டு கூட முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாமல் ஐந்து மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைதான் தாக்கல் செய்து அம்பலப்பட்டு போனது.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் புதுச்சேரி மக்கள்

ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரி மாநில தேவைகளைப் பற்றியோ மக்களின் நலனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து பல்வேறு துரோகத்தை செய்து வருகிறது குறிப்பாக,

  • இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றி ரேஷன் கடைகளை மூடி வைத்து புதுச்சேரி மக்களை பட்டினிக்குள் தள்ளியது.
  • புதுச்சேரியின் அடையாளமான பஞ்சாலைகளை நிரந்தரமாக மூடிவிட்டது.
  • அரசு மின்துறை சொத்துக்களை சூரையாடி, நாசமாக்க தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருவது.
  • அரசு பள்ளி படித்த மாணவர்களுக்கான 10 சதவீத மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டை கொடுக்க மறுத்து விட்டது.
  • மதவாத அட்சய பாத்திர திட்டத்தின் மூலம் மாணவர்களின் மதிய உணவை பறித்து பட்டினி போட்டுவருகிறது.
  • விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு நிதியை வழங்காமல் ஏமாற்றுவது.
  • புதுச்சேரிக்கு ஜிஎஸ்டி தொகையில் 41 சதவீதம் தர வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது அந்த நிலுவை தொகையை கூட வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
  • காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்காமல் புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவது, புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த மறுப்பது.
  • துணைநிலை ஆளுநர் மூலம் தனி அரசாட்சியை நடத்தி போட்டி அரசை நடத்தி வருகிறது.
  • புதுச்சேரி மக்களை பற்றி எந்த அக்கறையும் இல்லாத மொழி தெரியாத ஐஏஎஸ் அதிகாரிகளை புதுச்சேரியில் நியமித்து புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களை முடக்கப்பட்டுள்ளன.
  • இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கேவிகே உள்ளிட்ட சொசைட்டி கல்லூரிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்க வேண்டிய ரூ.3800 கோடி நிறுத்தி வைத்துள்ளது.
  • சுதந்திர போராட்டத்தை காட்டி கொடுத்து ஆங்கிலேயரிடம் பணம் வாங்கிய காந்தி படுகொலையில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கர் பெயரை சுதந்திர போராட்ட வீரர் என்று வரலாற்றை திரித்து மறைத்து வருகிறது.

என இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு துரோகத்தை மத்திய பிஜேபி அரசு புதுச்சேரிக்கு செய்து வருகிறது.

குறைக்கப்பட்ட மத்திய நிதி

மத்திய அரசாங்கம் அளிக்கக்கூடிய நிதியை படிப்படியாக வெட்டி சுருக்கி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.1874 கோடி நிதி கொடுக்கப்பட்டது இந்த ஆண்டு அதில் இருந்து ரூ.150 கோடி குறைத்து 1724 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது எந்த அடிப்படையில் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் இதுதான் இரட்டை எஞ்சின் ஆட்சியா ?

புதுச்சேரி பட்ஜெட்டை தாக்கலை தடுத்து நிறுத்திய ஒன்றிய பாஜக அரசு

2022- 23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இன்று நடைபெற்ற வேண்டிய பட்ஜெட் கூட்டத் தொடரில் பட்ஜெட்டை கூட தாக்கல் செய்ய முடியாமல் மாநில மக்களின் நலன்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுப்பதும் தன்னுடைய பதவிக்காக வாய் மூடி மௌனியாக மாநில முதலமைச்சர் இருப்பதும் கண்டிக்கதக்கது. புதுச்சேரி வரலாற்றில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதே இல்லை.

முதல்வர் தனது மவுனத்தை களைக்க வேண்டும்

முதல்வர் திரு. என். ரங்கசாமி பிரதமரை சந்தித்து பேசி, கூடுதல் நிதி கேட்டும், மாநில அந்தஸ்து கேட்டும் மனு அளித்து விட்டு வந்துள்ளார். பிரதமரை முதல்வர் சந்தித்த பின்னர் புதுச்சேரிக்கு எவ்வளவு நிதி கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை முதல்வர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் புதுச்சேரி மக்களுக்கு தங்கள் ஆட்சியால் ஒரு நன்மையும் இல்லை என்கிற போது, எதற்கு ? மதவாத பிஜேபி கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதையும் முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும். தனது சுயநலத்திற்காக புதுச்சேரி மக்களின் நலன்களை காவு கொடுப்பதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் துணைநிலை அளுநரும் தாங்களும் நடத்தும் அரசியல் கபட நாடகத்தை நிறுத்திவிட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் இல்லை என்றால் கூட்டணியை விட்டு விலகி பிஜேபி கட்சியின் புதுச்சேரி மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த மாநில முதல்வர் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால் புதுச்சேரி மக்களின் நலன்களை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்செய்தியை தங்கள் நாளிதழில் வெளியிட்டு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஆர்.ராஜாங்கம்,செயலாளர்,
சிபிஎம், புதுச்சேரி

Leave a Reply