கிராமப்புற வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை நிலைமை மிகவும் மோசமாகும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கணிசமான அளவிற்குப் பங்களிப்பிiச் செய்து வந்த வேளாண்துறையின் பங்களிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அதில் பணியாற்றி வந்த கிராமப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு மாற்று வேலை எதுவும் அளிக்கப்பட வில்லை.  இந்த ஆண்டின் மார்ச் மூன்றாவது வாரம் வரை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்வதற்காக 8.4 கோடி பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோமானால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதை உணரமுடியும்.

மக்களவைத் தேர்தல்களின்போது, நரேந்திர மோடியும், பாஜகவும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளிவீசினார்கள். ஆயினும் மோடி ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நிலைமை மிகவும் இருளார்ந்த நிலையில்  இருக்கிறது. அரசாங்கம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதத்தை அடைந்துள்ளது என்று பீற்றிக்கொண்ட போதிலும், (இதுவும் நம்பத்தகாத ஒன்றாகும்) இத்தகைய நவீன தாராளமய வளர்ச்சி வேலைவாய்ப்பில் பிரதிபலிக்கவில்லை என்பது தெளிவாகும்.

வழக்கமாக, அரசாங்கத்தை நடத்தும் பொருளாதாரவாதிகளும், கார்ப்பரேட் ஊடகங்களின் பகுத்தாய்நர்களும் பொருளாதாரத்தை ஊக்குவித்திடவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடவும்  எண்ணற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எனினும் இவை எதுவும் அவர்கள் அளித்துள்ள குறியீட்டினை எய்திடவில்லை,

நிதர்சனமான உண்மை என்ன? நவீன தாராளமய வளர்ச்சி என்பது வேலைகளை உருவாக்காது, மாறாக இருக்கும் வேலைகளையும் கொன்றுவிடும் என்பதேயாகும். இந்த அமைப்புக்கு என்னதான் வர்ணம் பூசினாலும், இந்த அமைப்பு வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையைத் தீர்த்திடாது. அதற்கு ஆட்சியாளர்களின் கொள்கைகளில் ஓர் அடிப்படை மாற்றம் தேவை.

தனியார் முதலீட்டின் மீது அதீதமாக சார்ந்திருத்தலும்,  தனியார்மயமும் வேலைவாய்ப்பை உருவாக்காது. ஏனெனில், நவீன தாராளமயப் பொருளாதாரவாதிகள், அதிக அளவில் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்கக்கூடிய விதத்தில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவ்வாறு வேலைக்கு ஆட்களை நியமித்தால் அது ஒப்பந்த அடிப்படையில் இருக்க வேண்டும், குறைந்த கால அளவிற்கே இருந்திட வேண்டும். வேலைகள் நிலையற்றதாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருந்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.  முறைசாராத் தொழில்களில் (iகேடிசஅயட ளநஉவடிச)கூட, 2004-05க்கும் 2011-12க்கும் இடையேயான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இவ்வாறு நவீன தாராளமயக் கொள்கை என்பது தொழிலாளர்களைப் பெருமளவில் ஈடுபடுத்தக்கூடிய விதத்தில் இருக்காது என்பதுடன், சிறிய தொழில்பிரிவுகளின் வளர்ச்சியையும் ஒழித்துக் கட்டும். வர்த்தக தாராளமயம் காரணமாக,  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விலையைவிடக் குறைவாக இருப்பதால், அவை உள்நாட்டுத் தொழில்பிரிவுகளை இலாபகரமற்றவைகளாக மாற்றி, நாளடைவில் ஒழித்துக்கட்டிவிடும்.

நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழ் அரசாங்கம் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கும், பணக்காரப் பிரிவினருக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் வரிகளைத் தள்ளுபடி செய்வதுடன், ஏராளமான மானியங்களையும் அவர்களுக்கு அளிக்கக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் இலட்சக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வந்த  பாரம்பர்யத் தொழில்களாக விளங்கும் கைத்தறி, முந்திரி, கயிறு மற்றும் கைவினைத் தொழில்கள் நசிவடையாதிருப்பதற்கு ஆதரவு அளிக்க மறுத்துவருகிறது.  வேளாண்துறையில் பொது முதலீடுகளை வெட்டியுள்ளதாலும், கல்வி, சுகாதாரம், மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற சமூகநலத் துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டையும் கடுமையாக வெட்டிக் குறைத்திருப்பதாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மிகவும் சுருங்குவதற்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

எனவே, அனைத்துத்துறைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய விதத்தில் அமைந்த மாற்றுக் கொள்கைகளே இன்றைய தேவையாகும்.  வேளாண்துறையிலும், உள் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதிலும் பொது முதலீடுகள் அதிகரிக்கப்படுவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட வேண்டும்.  தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடிய தொழில்கள், சிறிய அளவிலான தொழில்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டு, அவற்றைத் துவங்கிட ஊக்கத்தொகைகளும் அளிக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறைகளுக்கான பட்ஜெட் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டு நம் நாட்டில் அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மூலம் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும், சுகாதார அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகளை அளித்திட வேண்டும். இளைஞர்களுக்கான தொழிற்கல்வி வகுப்புகள் மீது கவனம் செலுத்தி இளைஞர்களை பன்முகத் திறமையாளர்களாக மாற்றும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)

ஆங்கிலத்தில் வாசிக்க

Where are the Jobs?