பரந்த கூட்டணியை அமைக்க திமுக, காங்கிரஸ் தவறிவிட்டன: கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான பரந்த மேடையை அமைக்க காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் தவறிவிட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டணி முயற்சியும் இழுபறியும்: புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் விரோத பாஜக – என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியாளர்களை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த ஆட்சியை வீழ்த்த, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற விரும்பினோம். இது குறித்துத் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் புதுச்சேரி மாநிலத் தலைவர்களிடம் பேசி, சிபிஎம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்க வழிகாட்டியிருந்தார்.
இருப்பினும், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. குறிப்பாக, திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் நிலவிய இழுபறியால், சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை.
பதவி மோகத்தால் பின்னடைவு: தற்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் காலமும் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சில தொகுதிகளில் பரஸ்பரப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் விரோதக் கூட்டணியை வீழ்த்துவதற்குப் பதில், புதுச்சேரி தலைவர்களின் தனிப்பட்ட பதவி மோகமே இந்த பின்னடைவுக்குக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சுட்டிக்காட்டுகிறது.
இரண்டு தொகுதிகளில் சிபிஎம் போட்டி: இந்தச் சூழலில், புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவது எனத் தீர்மானித்துள்ளது:
-
லாஸ்பேட்டை: இரா. ராஜாங்கம் (மாநிலச் செயற்குழு உறுப்பினர்)
-
திருபுவனை: மா. தட்சிணாமூர்த்தி
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாகப் பணியாற்றுவது எனவும், இதர தொகுதிகளில் பாஜக – என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களை முறியடிக்கப் பாடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்கள் நலன் காக்கும் மாற்று அரசை உருவாக்க, சிபிஎம் மற்றும் சிபிஐ வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.






