140வது மே தினப் புரட்சி வாழ்த்துக்கள்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)புதுச்சேரி மாநில குழு
ஊடக அறிக்கை

நாள்: 30.04.2026

இரட்டை இன்ஜின் ஆட்சியின் சுரண்டலை வீழ்த்துவோம்! உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை மீட்போம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மே தினப் புரட்சி வாழ்த்துக்கள்!!

வணக்கம். எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்பதைக் குருதி சிந்தி, உயிர் நீத்துப் போராடிப் பெற்றுக் கொடுத்த சிகாகோ தியாகிகளின் மகத்தான தியாகங்களுக்கும் ஆசியாவிலேயே எட்டு மணி நேரம் வேலைக்காக உயிர் தியாகம் செய்த புதுச்சேரி ஜூலை 30 தியாகிகளின்  தியாகங்களுக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்தை இயந்திரங்களோ, மூலதனமோ இயக்குவதில்லை; உழைக்கும் மக்களின் வியர்வைத் துளிகளே இயக்குகின்றன என்பதை உரக்கச் சொல்லும் உன்னத நாளான மே தினத்தில், புதுச்சேரி மாநில உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எங்களது புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும், அதன் பலன்கள் உழைக்கும் மக்களுக்குச் சென்றடையாமல் முதலாளித்துவ வர்க்கம் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டு லாபவெறியில் திளைக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத் தான் இந்தியா முழுவதும் உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் ஆட்சியை ஒன்றிய மோடி அரசு நடத்தி வருகிறது.

புதுச்சேரியில் ‘இரட்டை இன்ஜின் ஆட்சி’ என்ற கவர்ச்சியான முழக்கத்தோடு அதிகாரத்தைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு, இன்று உழைக்கும் மக்கள் மீது இரட்டைத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைச் சிறிதும் சிந்திக்காமல் புதுச்சேரி மண்ணில் அமல்படுத்தும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்து வருகிறது.

புதுச்சேரியின் அடையாளமாகத் திகழ்ந்த ஏஎஃப்டி, சுதேசி, பாரதி உள்ளிட்ட பஞ்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் லாபத்தில் இயங்கும் மின்துறையைத் தனியார்மயம் ஆக்கத் துடிக்கிறார்கள். அரசுத் துறைகளில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பாமல், இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்டத்தில் தள்ளியுள்ளனர்.

புதுச்சேரி முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் துறைகளில் நிரந்தரப் பணி என்ற ஒன்றையே அழித்துவிட்டு; ஒப்பந்தப் பணி, தொகுப்பூதியம், தினக்கூலி என்ற பெயரில் நவீனக் கொத்தடிமைத்தனத்தை இந்த இரட்டை இன்ஜின் அரசு அரங்கேற்றி வருகிறது. ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் உழைப்பு மிகக் குறைந்த ஊதியத்தில் கொடூரமாகச் சுரண்டப்படுகிறது. 100 ஆண்டுகாலப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளையும், நலச் சட்டங்களையும் நீர்த்துப்போகச் செய்து, கார்ப்பரேட் முதலாளிகளின் காலடியில் புதுச்சேரியைப் அடகு வைக்கும் வேலையை இந்த அரசு செய்து வருகிறது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, தனியார்மயம், வறுமை எனப் புதுச்சேரி மக்கள் படும் அளப்பரிய துயரங்களுக்குக் காரணம், இந்த முதலாளித்துவக் கொள்கைகளும், அதைத் தீவிரமாகச் செயல்படுத்தும் ஆட்சியாளர்களுமே ஆவர்.

பாடுபடும் பாட்டாளி வர்க்கம் இதுநாள் வரை போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்திடவும், இழந்ததை மீளப் பெறவும் சாதி, மதப் பிரிவினைகளைக் கடந்து வர்க்கமாக ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். தொழிலாளர் விரோத இரட்டை இன்ஜின் ஆட்சியின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, உழைப்பவனுக்கு உரிய ஊதியமும், கண்ணியமான வாழ்வும் கிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது.

தொழிலாளர்களின் ஒற்றுமையே நமது வலிமை! சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைக்கச் சமரசமின்றிப் போராடுவோம். “நமக்கான பொன்னுலகம் ஒன்றை நம்மால் தான் உருவாக்கிட முடியும்!” என்ற உறுதியோடு களம் இறங்குவோம். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 140வது மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இப்படிக்கு
தோழமையுடன்
எஸ். ராமச்சந்திரன்) மாநில செயலாளர், சிபிஐ(எம்), புதுச்சேரி மாநில குழு.

Leave a Reply