புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் என்பது வெறுமனே சுற்றுலாவையோ அல்லது மதுபான விற்பனையையோ மட்டுமே நம்பியிருக்கவில்லை. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மிக முக்கியத் தொழில் கேந்திரமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாழ்வளித்த பூமியாகப் புதுச்சேரி விளங்கியது. ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட நிர்வாக மற்றும் கொள்கை மாற்றங்களால் முடங்கிப்போன புதுச்சேரி தொழில்துறை, தற்போது மீண்டும் உயிர்ப்பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், தொழில்முனைவோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஜிஎஸ்டி (GST) ஏற்படுத்திய தாக்கம்
புதுச்சேரியில் ஒரு காலத்தில் பெரிய, நடுத்தர மற்றும் குறு, சிறு தொழில்கள் (MSME) செழித்தோங்கின. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்னணுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் (Pharma) எனப் பல துறைகளில் உற்பத்தி கொடிகட்டிப் பறந்தது. இதற்கு முக்கியக் காரணம், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு வழங்கிய வரிச்சலுகைகளே.
ஆனால், நாடு முழுவதும் ‘சமச்சீர் வரி’ (GST) முறை அமலுக்கு வந்த பிறகு, புதுச்சேரிக்கான பிரத்யேக வரிச்சலுகைகள் பறிபோயின. இதனால், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தன. இதன் விளைவாகப் புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததுடன், தொழில் வளர்ச்சியும் கடும் தேக்க நிலையைச் சந்தித்தது.
அரசின் புதிய திட்டங்கள்:
இந்தத் தேக்க நிலையை உடைக்க, புதுச்சேரி அரசு சில வெற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
-
தொழில், மின்சாரம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல், வருவாய் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகளில் 5 நாட்கள் முதல் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் தடையில்லாச் சான்று (NOC) வழங்கப்பட வேண்டும்.
-
நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் வழங்கும் வர்த்தக உரிமம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். கள ஆய்வு இன்றி மதிப்பிடப்பட்ட உரிமங்கள் உடனடியாக வழங்கப்படும்.
-
புதிய MSME நிறுவனங்களுக்குத் தொடக்க அனுமதிகள் மற்றும் ஆய்வுகளில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும்.
-
மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தொழில்துறை ஊக்குவிக்கப்படும்.
ஆனால் ஆளும் கட்சியின் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கும் லஞ்சம் நிர்வாக சீர்கேடுகள் ஆகியவை கலைப்படுவதே முதன்மையானது.
வேலைவாய்ப்பை உருவாக்குமா 2 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs)?
-
உழவர்கரை நகராட்சி தகவல் தொழில்நுட்பப் பூங்கா (IT Park): ரூ.725 கோடி மதிப்பில் உழவர்கரை நகராட்சி சார்பில் இது அமையவுள்ளது. இந்தியாவிலேயே ஒரு நகராட்சி அமைப்பால் உருவாக்கப்படும் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெருமையை இது பெறுகிறது. ஐடி (IT) மற்றும் ஐடிஇஎஸ் (ITES) நிறுவனங்கள் இங்கு வரவுள்ளன.
-
காரசூர் சிறப்புப் பொருளாதார மண்டலம்: புதுச்சேரி தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகம் (PIPDIC) மூலம் ரூ.1,250 கோடி மதிப்பில் காரசூரில் இது உருவாக்கப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருந்து வருகின்றது.
கள நிலவரமும், தொழில்முனைவோரின் கோரிக்கையும்
அரசின் அறிவிப்புகள் காகிதத்தில் சிறப்பாக இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம் உள்ளன. இன்றைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் சந்தை நிலையற்ற தன்மை ஆகியவற்றால் சிறு, குறு தொழில்முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்முனைவோர் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய அரசியல் மற்றும் நிர்வாகக் கோரிக்கைகள்:
-
குறைந்த வட்டி வீதத்தில் கடன்கள் மற்றும் வரிச்சலுகைகளை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
-
ஏற்றுமதி ஊக்கவிப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
-
வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
- தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும்வகையில் இருக்க வேண்டும்.
அரசு, வங்கிகள் மற்றும் தொழில்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தத் திட்டங்கள் முழு வெற்றி அடையும். பல ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமே சுருங்கிப் போன “வேலைவாய்ப்பு” என்ற கனவு, இந்த 2 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் நனவாக வேண்டும். திட்டங்களை விரைவாகத் தொடங்கி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வது ஆளும் அரசின் தலையாய கடமையாகும்.





