புதுச்சேரி முழுவதும்  கருப்பு கொடிக்கட்டி கண்டனம்.

பத்திரிகை செய்தி
நாள்: 15.04.2026

‘தொகுதி மறுவரையறை’ என்ற பெயரில் தென் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மோடி அரசை எப்போதும் ‘முதல் ஆளாக’ வரவேற்கும் முதல்வர் ரங்கசாமிக்குக் கடும் கண்டனம்! புதுச்சேரி முழுவதும் நாளை கருப்பு கொடிக்கட்டி கண்டனம்.

புதுச்சேரி: ஒன்றிய பாஜக அரசின் நயவஞ்சகத் திட்டமான நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்குத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பெண்கள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் அரங்கேறும் அதிகாரப் பறிப்பு: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப் போகிறோம் என்று கூறிக்கொண்டு, அதன் மறைவில் ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) எனும் பேராபத்தைத் தென் மாநிலங்கள் மீது திணிக்க பாஜக துடிக்கிறது. இது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் அடியோடு குறைக்கும் ஒரு திட்டமிட்டச் சூழ்ச்சியாகும்.

புள்ளிவிவரங்கள் காட்டும் பேராபத்து: இந்தத் தொகுதி மறுவரையறை அமலுக்கு வந்தால்:

நாடாளுமன்ற இடங்கள் 543-லிருந்து 850 ஆக உயரும்.
இதில் ஹிந்தி பேசும் வட மாநிலங்களின் பலம் 207-லிருந்து 543 ஆக (சுமார் 77 சதவீதம்) அதிகரிக்கும்.
ஆனால், தென் மாநிலங்களின் பலம் வெறும் 33 சதவீதம் மட்டுமே உயரும். இதனால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்பட்டு, வட மாநிலங்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்படும்.
புதுச்சேரியைப் புறக்கணிக்கும் மோடி அரசு – மௌனம் காக்கும் முதல்வர்: ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது புதுச்சேரி மாநிலத்திற்கு எந்தவொரு கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்கப்படுவதில்லை. புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கைகளான:

முழுமையான மாநில அந்தஸ்து,
பழைய கடன் தள்ளுபடி மற்றும் கூடுதல் நிதிப் பகிர்வு,
நிதி ஆணையத்தில் (Finance Commission) சேர்த்தல், என எதையுமே ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றுவதில்லை. புதுச்சேரியைத் தொடர்ந்து வஞ்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது மோடி அரசு.
வெட்கக்கேடான அரசியல் அடிபணிவு: இத்தனைப் புறக்கணிப்புகள் மற்றும் அவமானங்களுக்குப் பிறகும், புதுச்சேரி மக்களின் நலனைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல், மோடி அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் – அது மாநிலத்திற்கே எதிராக இருந்தாலும் – எப்போதும் ‘முதல் ஆளாக’ நின்று வரவேற்கும் ஒரு முதல்வராக ரங்கசாமி அவர்கள் இருப்பது வெட்கக்கேடானது. மாநிலத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்துவிட்டு, வெறும் ‘வாழ்த்துக் கடிதம்’ எழுதும் முதல்வராக அவர் மாறியிருப்பது புதுச்சேரி மக்களுக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இச்சதிக்கு எதிராகக் கொதித்து எழுந்து போராடத் தயாராகி வரும் நிலையில், தனது அரசியல் இருப்பிற்காக ஒன்றிய ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த முதல்வர் ரங்கசாமி துடிக்கிறார். ஜனநாயகத்தைச் சிதைக்கும் இந்த ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சியின் போக்கை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய அரசின் சதித் திட்டத்தையும், அதற்குத் துணை போகும் புதுச்சேரி முதல்வரையும் எதிர்த்து மக்கள் ஓரணியில் திரள வேண்டும் மேலும், தென்னிந்திய மாநிலங்களுக்கு விரோதமான ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு நமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும் நாளை (ஏப்ரல் 16ந் தேதி) வீடுகளில், கட்சி அலுவலகங்களில் கருப்புக்கொடி கட்டியும், புதுச்சேரி மக்கள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
(எஸ். ராமச்சந்திரன்) மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Ph.: 0413-2200100

Email id: [email protected]
Website: https://pycpim.in/
Read: marxist.tncpim.org

Leave a Reply